அறிமுகமும் நோக்கமும்
தமிழ் நிலத்தில் முருக வழிபாடு மிகவும் தொன்மை வாய்ந்தது; தமிழரின் வாழ்வியலோடும் பண்பாட்டோடும் நம்பிக்கை மற்றும் சடங்கு முறைகளோடும் பின்னிப் பிணைந்தது. தொல்காப்பியம், திருமுருகாற்றுப்படை, பரிபாடல், அகநானூறு முதலிய செவ்வியல் நூல்கள் முருகக் கடவுள் குறித்தும் வழிபாட்டு நெறிகள் குறித்தும் பேசுவது முந்தைய நெறிகளின் தொடர்ச்சியே ஆகும். மேலும், தொல் இலக்கியங்களில் காணப்படும் கடவுளரோடு தொடர்புடைய ’பழங்கதைகள்’ முருகன் சார்ந்த தொன்மங்களையும் மிகுதியாகப் பேசுகின்றன என்பதும் எண்ணத்தக்கது.
பிற கடவுளர் விழிபாட்டு முறைமைகளில் இல்லாத சிறப்புகள் பலவற்றையும் வாழ்வியல் சடங்கு முறைகளையும் முருக வழிபாட்டு நெறிகளில் அறிய முடிகிறது. பெருநிலை, சிறுநிலை என்ற இரு நிலைகளிலும் முருக வழிபாடும் அதனோடு தொடர்புடைய நெறிகளும் போற்றப்பட்டுள்ளன.
இந்தச் சமூகத் தொடர் அசைவுப் பின்புலத்தில், தொன்மையையும் இடையறாத தொடர்ச்சியையும் கொண்டுள்ள முருகன் – முருக வழிபாடு – வழிபாட்டுத் தலங்கள் போன்றவற்றை நுட்பமாக அணுகவேண்டிய தேவை உள்ளது. அந்த வகையில், முருக வழிபாட்டின் தொன்மை, முருகன் குறித்த தொன்மங்கள், கடவுள் தோற்றப் பின்புலம், முருகக் கடவுள் உருவாக்கம் குறித்தக் கருத்தியல் அணுகுமுறைகள், முருக வழிபாட்டின் சமூகப் பின்னணி, வழிபாட்டு நெறிகள் ஆகியவற்றைச் சமூகவியல் அடிப்படையில் நோக்குவதாக இக்கட்டுரை அமைகிறது.
கடவுளர் தோற்றமும் முருகன் தொன்மையும்
இன்று, உலகம் முழுவதும் மதம் சார்ந்த நம்பிக்கைகள் நிலவுகின்றன. ஆனால், மதம் என்ற நிறுவனம் கட்டமைக்கப்படுவதற்கு முன்பாகவே கடவுள் குறித்த நம்பிக்கைகளை உலகப் பழங்குடிகள் கொண்டிருந்தன. தொல்குடியான தமிழ்க் குடியும் இதற்கு விதிவிலக்கல்ல. தமிழர் நாகரிகத்தின் கூறுகளாக அறியப்படுகிற சிந்துவெளி நாகரிகம், வைகை நாகரிகம், பொருநை நாகரிகம் போன்றவையும் தொல்தமிழர் வாழ்வியோடு இறை வழிபாட்டு முறைமையையும் விழுமியச் சான்றுகளாகத் தருகின்றன.
கடவுள் சார்ந்த நம்பிக்கைகளுக்கான பொதுவான தோற்றக் காரணிகளாக அறிஞர் தேவநேயன் அவர்கள் (த.ம., ப.7-10) பின்வருவனவற்றைச் சுட்டுகிறார்:
- அச்சம் (இயற்கை, பேய், விலங்கு, …)
- முற்காப்பு (பெருவெள்ளம், இயற்கைச் சீற்றம், புயல், கொள்ளை நோய், …)
- நன்றியறிவு (திங்கள், மரங்கள், தீ, ஆ, …)
- பாராட்டு (ஊரைக் காத்தோர் [வீரர்], பத்தினிப் பெண்டிர்)
- அன்பு (செங்கோல் அரசன் இறப்பு [இந்திரன்])
- கருதுகோள் (கண்ணால் காண்பவை தவிர்த்து மனத்தாலேயே படைத்துக்கொள்ளும் கடவுள், [காதற்பண்பு, தொழில், திணை])
- அறிவு வளர்ச்சி (மருமையும் கடவுளுண்மையும் கண்டு மதங்களையும் சமயங்களையும் வகுத்தல்)
இவற்றுள், முதல் மூன்று நிலைகளைத் தொல் பழங்குடிகளின் ’அலைகுடி’ வாழ்வியல் நெறியிலும், அடுத்து மூன்று நிலைகளைச் சமூக மயமாக்கப்பட்ட ’நிலைகுடி’ வாழ்வியல் நெறியிலும் அடையாளப்படுத்தலாம். மதம் என்ற நிறுவன மயமாக்கல் மிகவும் பிற்காலத்தியது. இந்நிரலில் முருகன் உருவாக்கம் என்பது, காப்பாளன் (வீரன்) என்ற நான்காம் நிலையில் உருவாக்கம் பெற்ற குழும / திணைசார் கடவுள் என்பதை அறியமுடிகிறது.
முருகனும் பெயர்க் காரணங்களும்
தமிழ் நிலக் கடவுளான முருகன், சேயோன், செய்யோன், செவ்வேள் எனப் பலப் பெயர்களில் வழங்கப்படுகிறான். ஒவ்வொன்றும் காரணம் பற்றிய பெயர்களாக அமைந்துள்ளன. ’மணமும் அழகும் இளமையும் எழுச்சியும் புதுமையும் பொலிந்த ஒரு பெருமகன் தமிழ் நிலத்தில் வாழ்ந்தான். அவன், முருகன்’ எனப்பட்டான்.
அம் முருகன் மக்கட்குப் பற்றுக்கோடாக விளங்கினான்; திரட்சியுள்ள தூண் போன்று திகழ்ந்தான்: களிற்றையும் பிணைக்கும் வல்லமைகொண்ட வீரனாக விளங்கினான். பற்றுக்கோடு, திரட்சி, தூண் என்னும் பொருள்கள் செறிந்த ‘கந்து’ என்னும் சொல்லால் கந்தன்’ எனப்பட்டான். அவன் சிவந்த உடல் நிறத்தினன். அதனால் ’செய்யோன்-சேயோன்’ ஆனான். அவனது படை வன்மை வேலால் வெளிப்பட்டது. வேல் எறிதலில் வல்லவன். அதனால் ’வேலன்’ எனப்பட்டான். இத்துணைச் சிறப்புக்களும் நிறைந்த அவன் யாவராலும் விரும்பப்பட்டான். மக்களது உள்ளங் கவர்ந்த செம்மலாக விளங்கினான். எனவே ‘வேள்’, ‘செவ்வேள்’ எனப்பட்டான்(ஆ.க., ப.2) என்ற விளக்கத்தின்வழி முருகனின் பெயர்க்காரணங்களும் அவற்றின் சிறப்புகளும் உணரப்படுகின்றன.
மேற்குறித்த விளக்கங்கள் கோர்வையாக்கப்பட்ட பண்புநிறை செய்திகள் எனினும் இவற்றிற்குத் தமிழ்நிலச் சான்றுகளும் காலமுறை இலக்கியத் தரவுகளும் அடிப்படையாக அமைகின்றன.
முருகனும் மானுடவியல் தொன்மையும்
மனித இன படிநிலை வளர்ச்சியானது, விலங்காண்டி நிலை, காட்டுமிராண்டி நிலை, நாகரிக நிலை என்ற மூன்று தொடக்க நிலைகளைக் கடந்து வந்தது என்கிறார் அறிஞர் மார்கன். ஒவ்வொரு படிநிலையிலும் ஒவ்வொரு வகை ஆற்றலைப் பயன்படுத்தியே தம் வாழ்வியலை நகர்த்தியிருக்கிறான் மனிதன். விலங்காண்டி நிலையில் தன் தசைகளின் ஆற்றலே வாழ்வியலுக்கு அடிப்படையாக அமைந்தது. வேட்டையாடியான மனிதன் தன் உடல் தசைகளின் ஆற்றலைப் பயன்படுத்தி உணவுத் தேவையை நிறைவுசெய்தான். இரண்டாம் கட்டத்தில், விலங்குகளைப் பழக்குதல் மூலம் தன்வயப்படுத்தி, அவற்றின் ஆற்றலைத் தனதாக்கி, உணவுத் தேட்டத்தை நிறைவுசெய்துள்ளான். மூன்றாவதாக மனிதன் கண்டடைந்தது தாவர ஆற்றல். இது வேளாண் நாகரிகத்தின் தொடக்கமாகவும் மனிதகுல நாகரிகத்தின் தொடக்கமாகவும் அறியப்படுகிறது.
மனித இனம் முதன்முதலாக வேளாண் நுட்பத்தைக் கைவரப்பெற்று, நிலைத்த வாழ்வியலைத் தொடங்கிய இடம் மலைப் பகுதி என்பது மானுடவியலாளர் கருத்து. தொல் தமிழர், குன்றுகளும் மலைகளும் சார்ந்த குறிஞ்சிப் பகுதிகளில் வாழ்ந்த சூழலில் குழுத் தலைவனான முருகன், சிறப்புகளின் காரணமாகக் கடவுளாகப் போற்றப்பட்டிருக்கலாம் என்கின்றனர். முருகனைக் ‘கடவுள்’ என்பதோடு ‘தலைவன்’ என்ற பொருளிலும் இலக்கியங்கள் வழங்குவது நோக்கத்தக்கது.
மனிதன் தெய்வத்தன்மை எய்துதல் குறித்துக் கூறும் கோவை இளஞ்சேரல் அவர்கள், மாந்தன் என்னும் பூண்டு மலையில் முளைத்தது. அது தளிர்த்துத் தழைத்துப் பல்கிப் பெருகிப் பழக்க வழங்கங்களைக் கொண்டது; பண்பட்டது; மேம்பட்டது. மனம் போன பழக்க வழக்கம் போய், மனம் ஒன்றிய மரபு கொண்டோர் பொது மக்கள் என்னும் குடிமக்கள் ஆயினர். பண்பட்ட குடிமக்கள் சான்றோர் ஆயினர். வாழ்வாங்கு வாழ்ந்தவர் வையத்து வாழ்வாங்கு வாழ்ந்து, ஈடும் எடுப்பும் இன்றித் தனி மேம்பாட்டுத் தன்மை கொண்டனர். அன்னார் தெய்வமாக்கப்பட்டனர்(ஆ.க., ப.2) என்கிறார்.
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும்
தெய்வத்துள் வைக்கப் படும் (குறள்.40)
என்பது வள்ளுவர் வாக்கு.
‘கிழவன், கிழான்’ என்னும் சொற்கள் குடித்தலைவர், ஊர்த் தலைவர், இனக்குழுத் தலைவர் போன்றோர் குறித்து வழங்கப்பட்டன. அவை, சேக்கிழார், மூலங்கிழார், கோவூர் கிழார் என்பன போன்றன. முருகனை ’மலை கிழவோன்’ என்கின்றன சங்க இலக்கியங்கள். இப்பதத்தின்வழி அவன் நிலமும் அவனின் தலைமையும் உணர்த்தப்படுகிறது.
’முருகன்’ என்னும் மேம்பட்ட செம்மல் ஒரு பெரும் மக்கள் தலைவனாக வாழ்ந்தான்; அகவாழ்வில் நிறைந்து விளங்கினான்; புற வாழ்வில் பொலிந்தான்; தலைமைத் தன்மைகளை எல்லாம் இயல்பில் பெற்றிருந்தான். எனவே, தலைவன் என்பதற்கு உரிய ’கிழவன்’ என்னும் சொல்லால் குறிக்கப்பட்டான். (கிழமை – உரிமை; கிழவன் – உரிமையுடையவன்).
நாட்டுத் தலைவனான மன்னனுக்கும் கிழவன் என்னும் தலைமைத் தன்மைச் சொல் வழங்கப்பட்டது. சங்ககாலச் சிற்றரசர்களான அண்டிரன், இளந்திரையன் போன்றோர் தலைவன் என்ற பொருளில் வரும் கிழவன் என்ற சொல்லால் விளிக்கப்படுகின்றனர். அவ்வகையில், மலைநாட்டில் தோன்றி, மலைநாட்டு மக்களோடு வாழ்ந்து, அவர்தம் தலைவனாக விளங்கிய முருகன் ‘கிழவன்’ ஆனான் எனும் கருத்து நோக்கத்தக்கது. திருமுருகாற்றுப்படை,
விண்பொரு நெடுவரை குறிஞ்சிக் கிழவ (திருமுருகு.299)
பழமுதிர் சோலை மலை கிழவோயே (திருமுருகு.317)
என்று, முருகனை மலை நிலத்துத் தலைவனாகப் பதிவு செய்கின்றது.
இப்பின்புலத்தில், தங்களுக்குள் உருவான / உருவாக்கிய ஒரு தலைவனை ஆதிகால மலைநில மக்கள் “முருகன்” என்றழைத்தனர். ஒரு தலைவனுக்குரிய தகைமைகளோடும் ஒரு கூட்டத்தைப் பாதுகாத்து, வழிநடத்தும் ஆற்றலோடும் விளங்கியவன் முருகன் என்பதால், முருகன் கடவுளாக உயர்த்தப்பட்டதும் சங்ககாலம் முதலாகவே முருக வழிபாடு இருந்ததும் தெரியவருகிறது. மானுடவியல் ஆய்வாளர்களின் கருத்துப்படி, முருகன் ஒரு குழுமத்தின் தலைவனாக இருந்து பெரும் வெற்றிகளை ஈட்டித் தெய்வத்தன்மைக்கு உயர்த்தப்பட்டு, நாளடைவில் ஒரு தெய்வமாக வணங்கப்பட்டிருக்கலாம். சமூக அடிப்படையில் மலையைத் தெய்வமாகவும் முருகனை மலைவாழ் இறையாகவும் வழிபட்டிருக்கலாம் என்பது அறியப்படுகிறது.
‘குறிஞ்சிக் கிழான்’ என்பது போன்று பிற நிலத்துத் தெய்வங்களுக்கு முல்லைக் கிழான், மருதக் கிழான், நெய்தற்கிழான் எனத் தெய்வ நோக்கில் உயர்வு குறிக்கப்படவில்லை. இது மலைநிலத்தவனாகிய முருகனுக்கு அமைந்த தனித்தன்மையையும் தொன்மையையும் உணர்த்துகிறது.
முருகன்: இலக்கியத் தொன்மை
தமிழ் இலக்கிய வகைப்பாட்டில் வேராக விளங்குபவை சங்க இலக்கியங்கள். தமிழ் இனத்தின் தொன்மை வாழ்வியலை அறிந்துகொள்ள இவை அடிப்படைச் சான்றுகள். வாழ்வியல், பண்பாட்டியல், அறிவியல், அறவியல் முதலான கூறுகளைப் போலவே தொல்தமிழரின் இறை நெறியையும் இவற்றின்வழி அறிந்துகொள்கிறோம். அதன்படி, திணைசார் கடவுளர்களில் குறிஞ்சி நிலக் கடவுளாகத் தொல்காப்பியரால் சுட்டப்படும் முருகன் (தொல்.951) சங்க இலக்கியத்தின் பாடல்கள் பலவற்றிலும் பேசுபொருளாகியுள்ளான்.
‘முருகன்’ என்ற சொல் பொருணராற்றுப்படை (131), பரிபாடல் (8.81), அகநானூறு (1:3, 59:11, 98:10, 158:16), புறநானூறு (16:12, 23:4, 299:6) ஆகியவற்றிலும், ‘முருக’ என்ற சொல் திருருகாற்றுப்படை (269), பரிபாடல் (5:50) ஆகியவற்றிலும் பயின்று வந்துள்ளன. அதேபோல, முருகனைக் குறிக்கும் ‘சேயோன்’ (37:7), மற்றும் ’செவ்வேலான்’ என்ற சொற்கள் கலித்தொகையிலும் (93:26) ‘செவ்வேள்’ என்பது, பட்டினப்பாலை( 154), பரிபாடல் (5:13) ஆகியவற்றிலும் பயின்று வந்துள்ளன.
முருகனைக் குறிக்கும் ‘முருகு’ என்பது, திருமுருகாற்றுப்படை(244), மதுரைக்காஞ்சி (38, 181, 611, 724), பட்டினப்பாலை (37), நற்றிணை (34:11, 47:10, 82:4, 225:1), குறுந்தொகை (362:1), ஐங்குறுநூறு (245:3, 247:3, 249:2, 308:4), பதிற்றுப்பத்து (26:12), பரிபாடல் (8:65, 21:51), அகநானூறு (22:11, 28:6, 118:5, 137:8, 138:10, 181:6, 232:14, 272:13, 288:4), புறநானூறு (56:14, 259:5) ஆகியவற்றில் இடம்பெற்றுள்ளன.
சங்க இலக்கியப் பதிவுகளின் வழி, சங்க காலத்திற்கு முன்பிருந்தே முருக வழிபாடு தமிழ் மண்ணில் இருந்த தொன்மை, முருகனின் தன்மைகள் மற்றும் சிறப்புகள், முருகக் கடவுளின் வழிபாட்டு முறைமைகள், முருகனின் வீரதீர செயல்களின் பதிவுகளான தொன்மங்கள், முருக வழிபாட்டோடு தொடர்புடைய வாழ்வியல் சடங்கு முறைகள் போன்றவை அறியப்படுகின்றன. இவற்றில் அகவாழ்வில் நிகழ்த்தப்படும் ‘வேலன் வெறியாட்டு’ தமிழர் வாழ்வியலில் குறிப்பிடத்தக்க பண்பாட்டு நிகழ்வாகும் (குறு.23). ‘முருகயர்ந்து வந்த மதுவாய் வேலன்’ (362) என்பதில் வெறியாடலை ‘முருகயர்தல்’ என்று பதிவு செய்கிறது குறுந்தொகை. இதில், கையில் வேலேந்தி, முருகப் பாத்திரம் ஏற்று முருகயர்தல் நிகழ்த்தியவன் வேலன் எனப்படுகிறான்.
முருகனும் தொன்மமும்
மித் (myth) என்னும் சொல் தமிழில் தொன்மம் என்று வழங்கப்படுகிறது. இதற்கு, இயற்கை அல்லது வரலாற்றுக் கூறு தொடர்பான செய்திகளை உட்கொண்டதும் இயற்கையிறந்த நிகழ்ச்சி, செயல், மனிதர் பற்றியதுமான புனைந்துரை’ என்று ஆக்ஸ்போர்ட் அகராதி பொருளுரைக்கிறது.
தொன்மை தானே சொல்லுங் காலை
உரையொடு புணர்ந்த பழமை மேற்றே (தொல்.1493)
என்ற நூற்பா வழி, தொன்மையாவது, உரைச் செய்யுளொடு பொருந்தி பழைய வரலாற்றின் அடிப்படையில் வரும் என்கிறார் தொல்காப்பியர். தொன்மையும் தொன்மமும் இயைந்தும் மாறுபட்டும் நிற்கிற இடங்களை இவற்றின்வழி அறியமுடிகிறது.
‘தொன்மக் கதைகள் நேரடி உண்மையல்ல; ஆயினும், மறைமுகமாக அறிய வேண்டிய, தொல்பொருள் ஆய்வு போன்ற உண்மைகள் எனக் கூறுவதைக் கருதாமல் இவை ‘கட்டுக்கதைகள்’ என்பார் நடுநிலையாளரல்லர்’ (ச.இ.தொ.அ., ப.09) என்கிறார் தமிழண்ணல். பன்னெடுங்காலமாக ஓரிடத்தில் நிலைத்து வாழும் ஓரினத்தின் வாழ்வியல் அனுபவத்தில் தொன்மங்கள் தோற்றம் பெறுகின்றன. பண்பாட்டு அடிப்படையிலும் சமூகவியல் அடிப்படையிலும் இவை முக்கியத்துவம் பெறுகின்றன. தொன்றுதொட்டுக் காலந்தோறும் பழமையவாகக் கூறப்பட்டுவரும் செய்தி, நிகழ்ச்சி, கதைகள் என்பன போன்ற அனைத்தும் தொன்மம் என்ற கூறில் அடங்கும்.
இலக்கியப் புலவர்கள் இலக்கிய உத்தியாகத் தொன்மங்களைக் கையாண்டுள்ளனர். இதில் தொன்மங்கள் உவமமாய் மட்டுமன்றி நுண்பொருள் விளக்கமாகவும் அமைகின்றன. அவ்வகையில், முருகனோடு தொடர்புடைய தொன்மங்களைப் பண்டைத் தமிழ் இலக்கியங்கள் கொண்டுள்ளதைக் காண்கிறோம். விளக்க முடியாதவற்றை எளிதில் விளக்குவதற்கும் உண்மையையும் நுண்மையையும் தெற்றெனக் காட்டுவதற்கும் கதைவடிவம் தந்து புரிய வைப்பதற்கும் தொன்மம் பயன்படுகிறது.
தமிழில் முருகன் சார்ந்த தொன்மக் கருத்துகள் பரவலாகக் காணப்படுகின்றன. அழகு, அச்சம், ஆற்றல், சினம், அழிவு ஆகியவற்றை உணர்த்தத் தமிழ்ப் புலவர்கள் தொன்மத்தைப் பயன்படுத்தியுள்ளனர். தெய்வம் ஏறி விளையாடுவதைச் சாமியாடல் என்றும், வெறியாடுதல் என்றும், அடக்க முடியாத சினம் ‘முருகச் சீற்றம்’ என்றும் கூறப்பட்டுள்ளது.
‘முருகன் நற்போர் நெடுவேல் ஆவி’ (அகம்.1)
‘முருகன் அன்ன சீற்றத்துக் கடுந்திறல்’ (அகம்.156)
‘முருகச் சீற்றத்து உருகெழு குரிசில்’ (புறம். 16)
‘சூர்நவை முருகன் சுற்றத் தன்ன’ (புறம். 23)
‘முருகு இயன்றன்ற உருவினை ஆகி (மதுரைக் – 724)
முதலான பாடலடிகள் முருகத் தொன்மங்களைச் சார்ந்து படைக்கப்பட்டுள்ளன.
குதிரை முகமும் மனித உடலும் கொண்ட சூரபன்மாவைக் கொன்றவன் சிவந்த வேலையுடைய முருகப் பெருமான் என்ற தொன்மச் செய்தியைக் கலித்தொகைப் பதிவு செய்கிறது.
ஈர் அணிக்கு ஏற்ற ஒடியாப் படிவத்துச்
சூர் கொன்ற செவ்வேலாற் பாடி (கலி.93:25-26)
குறிஞ்சி நில மக்கள் தம் தெய்வத்தைத் தீயின் கூறாகக் கொண்டு, சேந்தன் சிவந்தவன் என்று பெயரிட்டு வழங்கியதாகவும் கருத்து உண்டு. சேயோன், சேய் என்பன இலக்கிய வழக்கு. குறுந்தொகைக் கடவுள் வாழ்த்து முருகனை ‘சேவலங் கொடியோன்’ என்கிறது. முருகனை, சிவந்த திருமேனியை உடையவன், செந்நிற ஆடையை அணிந்தவன், செம்மையான அடிமரத்தையுடைய அசோகினது குளிர்ச்சியான தளிர் அசையும் காதுகளை உடையவன் என்கிறது திருமுருகாற்றுப்படை.
செய்யன் சிவந்த வாடையன் செவ்வரைச்
செயலைத் தண்டளிர் துயல்வருங் காதினர் (திருமுருகு.207-208)
வேட்டைத் தொழிலால் குறவர் மறஞ் சிறந்திருத்ததனால், தம் தெய்வத்தையும் மறவனாகக் கருதி, அதற் கேற்றவாறு அவனை முருகன் (இளைஞன்) என்றனர்.
அருங்கடி வேலன் முருகொடு வளைஇ (மதுரைக்.611)
அறிஞர் பார்வையின் முருகன்
தமிழ் மண்ணில் முருக வழிபாடு போலவே, முருகன் குறித்த கருத்தியல்களும் தொன்றுதொட்டு வருவன. வேர் அறியப்படாத தொன்மை பல்வேறு கருத்தாங்களுக்கு இடம்தரும் என்பதே இதற்கு அடிப்படை. சேயோன், சிவன் என்னும் இரு சொற்களும், ஒரே மூலத்தினின்று தோன்றிச் சிவந்தவன் என்னும் பொருளைக் கொண்டன (த.ம. ப.37). என்கிறார் மறைமலையடிகள். பழந்தமிழ் முன்னோர் ஒளிவடிவே இறைவன் வடிவென உணர்ந்தபின், பகற்காலத்தே பேரொளிப் பிழம்பாய் விளங்கும் கதிரவனையே கடவுளாகக் கருதி வழிபட்டு வரலானார். பகற்பொழுதில் கதிரவனை வணங்கிய முன்னோர் அவனற்ற இராப் பொழுதிலும் அவனை வழிபட எண்ணியதன் காரணமாகவும் அருகில் வைத்து அவனை அன்பொழுக வழிபட எண்ணிய விழைவிலும் தோன்றியதே சிவலிங்க வழிபாடு என்பது இவருடைய இறைத் தோற்றத் பார்வையாக உள்ளது. அதாவது, தீக்கு முன்னோர் கொடுத்த வடிவமே சிவலிங்கம் (த.ம., பக். 154- 155) என்று அடிகளார் தம் கூற்றை முன்வைக்கிறார்.
மேலும், சிவன் என்னும் சொல் முருகப் பிரான் பெயராகப் பண்டைத் தொல்காப்பிய நூலுள் ஓதப்பட்ட சேயோன் என்னுஞ் சொல்லின் திரிபேயாகும் என்றும், ‘காலைஞாயிறு இளஞ்செவ்விய தாகலின் முருகவேள் எனவும், மாலைக் காலத்து ஞாயிறு முதிர்ந்து செவ்விய தாகலிற் சிவபெருமானெனவும் கருதப்பட்டமையின் இளமுருகன் சிவபிரானுக்கு மகனெனக் கொள்ளப்பட்டான்’ என்பது முருகன் தோற்றம் குறித்த அடிகளார் கொள்கையாக உள்ளது (த.ம., ப.122). (காலை சூரியன் – முருகன்; மாலை சூரியன் சிவபெருமான். சேயோன் = சிவந்த; சிவன் = சிவந்த).
முருகனின் ஊர்த்தியாகச் சுட்டப்படும் மயில் குறித்துக் குறிப்பிடும் இடத்து, சேயோனாகிய முருகப்பிரான் விடியற்காலையிற் கிழக்கே மேலெழுந்து கதிர் விரிக்கும் இளவள ஞாயிற்றின் திருவுருவே ஆகலின், அவன் என்றும் இளையோன் எனப்பட்டான். கதிரவனுக்குக் கீழ்த் தோன்றும் நீலநிறக் கடலே அவன் ஊரும் நீலமயிலாகவும் கருதி வழிபடப்பட்டன என்பது அடிகளாரின் முடிவு (த.ம., ப.164) எனினும், இஃது ஆய்விற்கு உட்பட்டது.
நிறைவாக
தமிழ் மண்ணில் குமுகாயக் கட்டமைப்புத் தொடங்கியது முதலாகவே முருகனைப் போற்றும் வழிபாட்டு முறைமை தொடங்கியுள்ளது. அது வேரூன்றிய இடம் மலை நிலமாகும். கடவுள் ஆக்கத்தில் ‘நன்றியின் பாலது’ என்ற அடிப்படையில் முருகக் கடவுள் வழிபாட்டு முறைமையும் அதுசார்ந்த தொன்மங்களும் உருவாகியுள்ளன.
தொன்மங்கள் முருகனை தெய்வ நிலைக்கு உயர்த்த உதவியுள்ளன. ‘மனிதனின் அளப்பரிய செயலால் கடவுளர் ஆக்கம் பெறுவர்’ என்ற முன்னோர் கூற்றுக்கு விளக்கமாய் முருக வழிபாடு அமைகிறது.
இலக்கியச் சான்றுகளோடு, தொல்லியல் சான்றுகளும் (வேல்) முருகன் ஆக்கத்தின் தொன்மையையும் தமிழரின் வழிபாட்டு முறைமையையும் பறைசாற்றுகின்றன.
அகவாழ்வில் முருக வழிபாடும், அதனோடு தொடர்புடைய சடங்கியலும் பண்பாட்டுச் செல்நெறியாக வளர்த்தெடுக்கப்பட்டன.
சங்க காலத்து தெய்வ வழிபாட்டு நெறிகள் இடையறவு கொண்டும், திரிபேற்றும், மாறியும், மறைந்தும் காணப்படும் நிலையில், முருக வழிபாட்டுநெறி மட்டுமே இடையறவு இன்றி, அதன் முன்னைக் கூறுகளோடு இன்றும் தொடர்கிறது.
சுறுக்கக் குறியீட்டு விளக்கம்:
அகம். – அகநானூறு
ஆ.க. – ஆராய்ச்சிக் கட்டுரை
கலி. – கலித்தொகை
குறள். – திருக்குறள்
குறு. – குறுந்தொகை
ச.இ.தொ.அ. – சங்க இலக்கியத் தொன்மை அகச்சான்றுகள்
த.ம. – தமிழர் மதம்
தொல். – தொல்காப்பியம்
புறம். – புறநூனூறு
மதுரைக். – மதுரைக்காஞ்சி