தமிழரின் அயலகப் பரவலும் தமிழ்க் கல்விச் சூழலும்

Published: July 14, 2026 Read by: 11 Get full article

அயலகப் பரவல்  காரணிகள்:

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தமிழ்ப் பெருநிலம்  ஆப்பிரிக்க கண்டத்தோடு ஒட்டியதாய் இருந்ததென்றும் பேரூழியிற் கடல்கொண்ட பல்லாயிரம் ஆண்டுகட்கு அப்பால் பின்னரும் கடலால் கொள்ளப்பட்டதாலும்தான் இன்று  இத் தமிழ்கூறும் நல்லுலகம்  தன்னலவில் சுருங்கிச் சிறியதாயிற்று என்பர் ஆராய்ச்சியாளர்கள்.

 தொடர்ந்து கடற்கோளால் மூழ்கிய குமரிக்கண்டத்தில் (லெமூரியா) தோன்றிய மாந்த இனமே தொன்மை இனம் என்பதனை ’பஃறுளியாற்றுப் பன்மலையடுக்கத்துக் குமரிக்கோடுங் கொடுங்கடல் கொள்ள (சிலப்.11.19.22) என்னும் பாடல் வழி அறியலாம். மேலும், தமிழ்நாட்டில் அத்திரம்பாக்கம் குடத்தலை ஆற்றுப் படுகைகளில் கிடைத்த பழமையான கற்கருவிகளும் இக்கருத்திற்கு வலுசேர்க்கின்றன. 

தமிழர் தோற்றத்தையும் அவர்களின் தொன்மையையும் அவர் உலகெலாம் பரவிய வகையும் அதற்கான காரணங்கள் என்ன என்பதையும் நம் பழந்தமிழ்ப் பனுவல்கள், கல்வெட்டுகள், உலக வரலாற்றறிஞர்களின் குறிப்புகள், நிலவியல், மொழிநூல், கடல் நூல் சன்றுகளுடனும் விளக்கிக் கூறுவதுடன், புலப்பெயர்வுச் சூழலில் தங்கள்  தாய்மொழியை, பண்பாட்டைத் தக்கவைப்பதற்கும், தாய்மொழி கல்வியின் தேவை மற்றும் சூழல் குறித்தும் ஆராய்ந்து கூறுவது இக்கட்டுரையின் நோக்கமாக அமைகிறது. 

நன்னூலாரின் திசைச் சொல்லிற்கு இலக்கணம் கூறிய மயிலை நாதர் உரை (பெயரியல்; 16 )  அருமணம், கம்போசம், ஈழம், கூவகம், பல்லவம், அங்கம் முதலான 17 நிலங்களை உள்ளடக்கியது எனக் கூறியுள்ளதிலிருந்து தமிழர் பல்வேறு காலகட்டங்களில், பல்வேறு வாழ்வியல் சூழலில் பல்வேறு நாடுகளுக்குச் சென்றதை அறியமுடிகின்றது. இதை நன்னூலாருக்கு முன்பே எழுதப்பட்ட தொல்காப்பிய (தொல்.சொல்.395) உரையாசிரியர் தெய்வச்சிலையார்  அருமணம் என்பது இப்போது பர்மா. இதற்கு அக்காலத்துத் தலைநகரம் கடாரம். காம்போதி என்பது இப்போதுள்ள கம்போடியா ஈழம் சிங்களத்தீவு. கூவகங் கொல்லமேன்பன கடல்கொண்ட நாடுகளாகும். (தொல்.சொல்.395) எனக் கூறியுள்ளார். 

பல்லவமென்பது பஃலவ என்ற பாரசீகம் (சீவக.1185). வங்கம் என்பது இப்போதுள்ள வங்காளமாகும். சிங்களம் என்பது ஈழத்தீவாகும். சோனகம் என்பது யவனர் நாடு (கிரேக்கநாடு). சாவகம் என்பது சாவகநாடு. (மணிமே.10, அடி. 74-103). இதன் தலைநகரம் நாகபுரம். சீனம் என்பது, இமயத்துக்கு வடக்கே உள்ள சீனதேயம். கன்னித் தென்கரைக்கட் பழந்தீவம், லக்கத்தீவுகள் முதலியனவாகும். இப்படித் தமிழர்கள் பல்வேறு நாடுகளில் பரவியதன் காரணமாகப் பல்வேறு நாடுகளிலிருந்து பல்வேறு காரணங்களுக்காக மக்கள் (சோனகர், சீனர்) தமிழகத்திற்கும் வருகைதந்தனர் (பட்டினப்.அடி.213-17).  

இவ்வாறு பல்வேறு நாடுகளுக்குத் தமிழர் புலம் பெயரக் காரணமாகக்  கீழ்க்கண்ட சில காரணிகளைக் கூறலாம்.

 போர்க் காரணம்: 1939-45 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற இரண்டாம் உலகப்போரில் 50 மில்லியனுக்கும் கூடுதலானோர் ஐரோப்பாவிலும் ஆசியாவிலும் மற்ற கண்டங்களிலும் உயிரிழந்துள்ளனர். 4 தில்லியன் டாலர்கள் சேதமாயின. பஞ்சம், பட்டினியால் பிரிட்டீஷ்காரர்களிடம் அடிமையாகிக் கூலிகளாக அயல்நாடுகளுக்குச் செல்லலாயினர்

வாழ்வாதாரம்: தேயிலைத் தோட்டங்களுக்குக் கூலிகளாகவும். அடிமைகளாகவும் அழைத்துச் செல்லப்பட்டனர்.குறிப்பாக,   சயாம் மரண இரயில் பாதையைக் கூறலாம். சயாம்  இரயில்வே கட்டுமானத்திற்கு கொண்டு வரப்பட்டவர்கள் அனைவரும் கட்டாய உழைப்பு வேலைக்கு உட்படுத்தப்பட்டனர். போதிய உணவு இல்லாமை, கொடிய மிருகங்களின் தாக்குதல்கள், ஜப்பானியரின் மிகக் கொடூரமான தண்டனைகளைச் சகித்துக் கொள்ள முடியாமல் 90,000 ஆசியத் தொழிலாளர்களும் 16,000 போர்க் கைதிகளும் இறந்து போயினர். இப்படி பலர் இறந்தும், எஞ்சியோர் வாழ்வாதாரம் தேடிப் பல்வேறு நாடுகளுக்குப் பரவினர். 

வணிகம்: தமிழர் வணிகம் சார்ந்தும் அயல் நாடுகளுக்குச் சென்று தங்கினர். கி.மூ. மூன்றாம் நூற்றாண்டு முதலே தமிழகத்திற்கும் அயல் நாடுகளுக்கும் குறிப்பாகத் தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கும் இடையே வணிகத் தொடர்பு இருந்தது பல இலக்கிய இலக்கணச் சான்றுகள் வழி அறியலாம். குறிப்பாக இக்கால அகழாய்வுகள் வழி கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் மற்றும் கல்வெட்டுகள் வழியாகத் தமிழர் பல்வேறு உலகநாடுகளுடான வணிகத் தொடர்புகளைக் கொண்டிருந்தனர் என்பதை அறியமுடிகின்றன.

மூவேந்தர் படையெடுப்பு:  தமிழக அரசர்கள் பிற நாட்டைக் கைப்பற்றும் நோக்குடனும் பிற நாடுகளுக்குப் படையெடுத்துச் சென்றதையும்  கங்கை கொண்டான், கடாரம் கொண்டான் என்னும் அரசர்களிம் பெயர்களைக்குறிக்கும்  இலக்கிய வரிகளால் அறியலாம். 

  இவ்வாறு பல்வேறு நாடுகளில் பரவி வாழ்கின்ற அயலகத் தமிழர்கள் தாம் வாழும் நாட்டுச் சூழலில் சமூகம்,  பொருளாதாரம், அரசியல், கல்விச் சூழலில் இன்றளவும் தங்கள் மொழி, பண்பாடு, சுதந்திரம், தம் சுயமரியாதை போன்றவற்றைப் பெற்றிட, காத்திட,  போராடித்தான் பெற வேண்டிய சூழல் நிழவுகிறது. இச்சூழலில் தான்   பிறநாட்டுச் சமூக மக்களிடமிருந்து தன்னை தனித்து அடையாளப்படுத்திக் கொள்ளத் தங்களின் மொழி, பண்பாட்டை தங்களின் தாய்மொழிக் கல்வி மூலமே பெற இயலும் என்பதனை ஆழ்ந்து சிந்திக்கும் போக்கு நிலைப்பெற்றது எனலாம். முதலாம், இரண்டாம், மூன்றாம் தலைமுறைத் தமிழர்கள் தங்களின் தாய்மொழித் தேடலில் அதிக ஆர்வம் கொண்டிருப்பது பல நாடுகளில் தமிழ் மொழி மற்றும் பண்பாட்டை வளர்ப்பதற்கும் தக்க வைப்பதற்கும் வழியாக உள்ளன.   

தாய்மொழிக் கல்வியின் தோற்றமும் தேவையும்:

 இன்றளவும் புலப்பெயர்வுத் தமிழர்கள் வாழும் நாடுகள் ஒவ்வொன்றும் தனித்துவமான தேசியப் பண்பாட்டைக் கொண்டிருக்கின்றன. இந்தத் தேசியப் பண்பாட்டு ஓட்டத்துடன் இணைய வேண்டிய அழுத்தம் இயல்பாகவே அங்கு குடியேறும் ஒவ்வொரு இனத்துக்கும் உண்டு. குறிப்பாக, அந்நாடுகளில் பிறந்து வளரும் தமிழ்ப் பிள்ளைகள் வாழிட நாடுகளுக்கான தேசியப் பண்பாட்டை ஒட்டியே வளர்ந்து வருவர். இந்நிலையில் தாய்மொழியையும் பண்பாட்டு மரபுகளையும் வரலாற்றையும் கல்வி வாயிலாகவே புலப்பெயர்வுத் தமிழர்களின் புதிய தலைமுறையினருக்குக் கற்றுக் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதன் வழியே தமிழ்மொழிக் கல்வியின் தேவையை உணர்ந்த புலப்பெயர்வுத் தமிழர்கள் வலுவான தாய்மொழிக் கல்விக் கட்டமைப்புகளை உருவாக்கத் தலைப்பட்டனர். புலம்பெயர்ந்தோர் சமூகச் சூழலில் தமிழ்க்கல்வியின் தோற்றம் ஏறக்குறைய கால் நூற்றாண்டைக் கடந்துவிட்டது. இந்தக் கால் நூற்றாண்டில் பாரிய மாற்றங்கள் நிகழ்ந்துவிட்டன. தொடக்ககாலத் தமிழ்ச் சமூகத்தின் உளப்பாங்கு இப்போது இல்லை. வாழும் நாட்டுக்குரிய பண்பாட்டு வடிவங்களை உள்வாங்கிய தலைமுறையினர் தலையெடுத்து விட்டனர். பொருளாதார வளங்களும் வேறு தளத்துக்குச் சென்றுவிட்டன. சமூகத்தவரின் அடிப்படைச் சிந்தனைகளும் தேடல்களும் மாற்றங்களை நோக்கிச் செல்கின்றன. புலப்பெயர்வுத்தமிழர்கள் முன்னெடுத்துவரும் தாய்மொழிக்கல்வி, அடையாளம் சார்ந்த இருப்பைப் பேணுவதில் பெரும்பங்கு வகிக்க வேண்டியதொன்றாகும். தாய்மொழியை இரண்டாம் நிலையில் கற்கும் சூழலின் தோற்றம் ‘தாய்மொழியைப் பாரம்பரிய மொழியாக முதல் மொழிக்கு அடுத்த நிலையில் கற்றல்’ என்னும் சூழலின் தோற்றம் இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலேயே  உருக்கொண்டதெனலாம். 

ஐரோப்பியரது ஆட்சிக்காலத்தில் வேலை வாய்ப்புகளுக்காக அவர்களது ஆட்சிக்குட்பட்டிருந்த பிறநாடுகளுக்குக் கொண்டு செல்லப்பட்டோர் இருவகையினராவர். கூலித்தொழிலாளிகளாகக் கொண்டு செல்லப்பட்டோர் ஒருவகை. கல்விப் பின்புலம் சார்ந்து தொழில் வாய்ப்புப் பெற்றுச் சென்றோர் மறுவகை. இத்தகையோரும் அந்தந்த நாடுகளில் நிரந்தரமாகத் தங்கிவிட்டனர்.

விடுதலைக்குப் பின்னரும் கல்வி, தொழில் வாய்ப்புகளுக்காக வளர்ச்சியுற்ற நாடுகளுக்குச் செல்வோரும் இருந்தனர். இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் உள்நாட்டு யுத்தங்கள், இயற்கைப் பேரழிவுகள் காரணமாக அகதிகள் என்ற பகுப்பில் கணிசமானோர் ஐரோப்பிய, வடஅமெரிக்க, ஆஸ்திரேலிய நாடுகளில் குடியேறினர். இத்தகையோரும் குடியேறிய நாடுகளில் நிரந்தரமாகத் தம் வாழ்வை அமைத்துக்கொண்டனர்.

இவ்வாறு குடியேறியோர் தமது முதற் தலைமுறைக் காலத்தில் தாய்மொழியிலேயே பெரிதும் தமது தொடர்பைக் கொண்டிருந்தனர். அவர்களது சிந்தனா மொழியாகவும் தாய்மொழியே இருந்தது. மொழியாலும் பண்பாட்டாலும் பழக்கவழக்கங்களாலும் முற்றிலும் மாறுபட்ட ஒரு புலத்தில் வாழத்தலைப்பட்ட ஓரினத்தினுடைய தனித்துவ இயல்புகளில் மாற்றங்கள் ஏற்படுவது தவிர்க்க முடியாததாகும்.

குடியேறியோரது இரண்டாம் தலைமுறையே இவ்வாறான மாற்றங்களைப் பெரிதும் வெளிப்படுத்துவோராக இருந்தனர். குடும்பம் என்ற சிறு வட்டத்துக்கு அப்பால் இரண்டாம்/ மூன்றாம் தலைமுறையினரின் சமூக மொழியாகவும் தொடர்பு மொழியாகவும் அந்தந்த நாடுகளுக்குரிய மொழியே ஆதிக்கம் பெற்றுச் சிந்தனா மொழியாகவும் திகழ்ந்தது. அவர்களது தாய்மொழி இரண்டாம் மற்றும் மூன்றாம் மொழி என்னும் நிலையை அடைந்தது.

இந்நிலையில்தான் முதல்மொழியை அடுத்து, தாய்மொழியை பாரம்பரிய மொழியாக இரண்டாம் நிலையில் கற்கும் சூழல் தோற்றம் கொண்டது. இச்சூழல் தமிழருக்கு மட்டும் உரியதன்று. ஆசிய, ஆபிரிக்க தென்னமெரிக்க, கிழக்கு ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்தோருக்கும் பொருந்தும். 

கற்றல் கற்பித்தலில் நிறுவனங்களின் தமிழ்ப்பணிகள் தாயகத்தைக் காட்டிலும் வெளிநாட்டில் கணினி மற்றும் இணையத்தின் பயன்பாடு மிகவும் அதிகம் இருக்கின்ற காரணத்தினாலும், இங்குள்ள குழந்தைகளுக்குக் கணினிப் பயன்பாடு நல்ல முறையில் தெரிந்திருக்கின்ற காரணத்தினாலும் கற்றல் கற்பித்தலில் புதுமையை ஏற்படுத்துகின்றனர். கற்பித்தலில் புதுமை முறைகளான செயல்வழிக் கற்றல், படைப்பாற்றல் கல்வி, நுண்ணிலைக் கற்றல் மற்றும் கற்பித்தல் போன்ற பல்வேறு அணுகுமுறைகளை மிகத் திறம்பட இங்குள்ள நிறுவனங்கள் செய்து வருகின்றன. அயல்மொழிப் பாடங்களில் (குறிப்பாக ஆங்கிலம்) உள்ள கேட்டல், பேசுதல், எழுதுதல், வாசித்தல் போன்ற திறன்களை மேம்படுத்துவதற்குப் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. மேலும் பல்லூடகத்தைப் பயன்படுத்துவதற்கும் பல பயிற்சிகள் மேற்கொள்கின்றனர்.

தமிழர்களின் பண்பாடு, பாரம்பரியம் குறித்த விழிப்புணர்வு, பள்ளி, கல்லூரிகளில் சுகாதாரம், உடல்நலம் பேணுதல், மன அழுத்த மேலாண்மை மற்றும் நன்னெறிக் கல்வி, திருக்குறள் வகுப்புகள் நடத்துதல், பேச்சுப் பயிற்சி, கட்டுரைஎழுதும் பயிற்சி, கவிதை எழுதும் பயிற்சி, நூல் திறனாய்வு போன்ற அனைத்துத் திறன்களையும் வளர்க்கப் பெரிதும் பாடுபடுகின்றன. தரமான கல்வியை மாணவர்களுக்கு வழங்குவதில் அங்குள்ள ஆசிரியர்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றனர். பல்வேறு தமிழ் அமைப்புகளும், கல்வி நிறுவனங்களும் தமிழ்ப்பணிகளைச் செம்மையாக மேற்கொள்கின்றன. கல்வி சார்ந்த நிறுவனங்கள் கற்பித்தல் முறைகளை வகுக்கவும் நடைமுறைப்படுத்தவும் பல அணுகுமுறைகளை மேற்கொண்டு வருகின்றன. “செந்தமிழைச் செழுந்தமிழாய்ச் செய்திடவும் வேண்டும்” என்ற பாவேந்தரின் கூற்றுப்படி, நம் தமிழைப் போற்றி அதை உலகமெல்லாம் செழுமையாக்கிடப் போராடி வருகின்றன.

தமிழர்களின் முக்கியச் சொத்து மொழியும் பண்பாடும் ஆகும். புலம்பெயர்ந்த நாடுகளிலும் அவ்விரண்டையும் கட்டிக்காக்க அவர்கள் எடுத்த நடவடிக்கைகள் ஏராளம். பெரும்பாலும் வசதி படைத்த மக்களே இனவளர்ச்சிக்காகப் பல நற்செயல்களை முதலில் செய்வர். மலேசியாவிலும் நகரத்தார் தொழில் துறைகளில் முன்னேறி இருந்தனர். அவர்களே தமிழ் வளர்ச்சிக்கு வித்திட்டனர். அவர்களைப் போன்றே இசுலாமியர்களும் பல்வகையிலும் தமிழ்த் தொண்டு செய்து தமிழ் மொழியை அக்கறையோடு வளர்த்து வருகின்றனர்.

இதனை,

“நகரத்தாரைப் போன்றே மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் வாழும் தமிழ் முஸ்லீம்கள் தமிழார்வமும் தமிழ்ப் பற்றும் கொண்டு விளங்குகின்றனர். இந்நாடுகளில் வாழும் தமிழர்களோடு (முஸ்லீம் அல்லாத) ஒப்பு நோக்குகையில் தமிழ் முஸ்லீம்களின் வீடுகளில் தமிழ்ப் புழக்கம் அதிகமாக உள்ளது. மற்றத் தமிழர்களின் வீடுகளில் ஆங்கிலமே அதிகமாக ஆட்சி செய்து வருகிறது. மொழிப் புழக்கம் தமிழ் முஸ்லீம்களிடம் அதிகமாக உள்ள காரணத்தால் தமிழ்க் கல்வியில் தமிழ் முஸ்லீம்களின் தரம் உயர்ந்து காணப்படுகிறது” என்று மொழிகின்றார் டாக்டர் லெட்சுமி.

அதேபோன்று யாழ்ப்பாணத்திலிருந்து குடியேறியவர்களும் திருப்பாவை, திருவெம்பாவையைப் பக்திப் பெருக்குடன் பரப்புவதுடன் தமிழ் வளர்க்கும் பணியிலும் ஈடுபட்டுள்னர்.

மலேசியா / சிங்கப்பூர்

 இன்று தமிழகத்தைத் தவிர்த்துத் தமிழர்கள் அதிகம் உள்ள நாடு மலேசியாவாகும். அரசாங்கமும் பல்வேறு தமிழர் இயக்கங்களும் தமிழை வளர்க்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. மலேசியாவில் தமிழும் தழைத்தோங்கி இருப்பதை, “மலேசியாவிலும் சிங்கப்பூரிலும் தமிழும், தமிழரும் நிலைபெற்றிருப்பது தமிழன்னை பெற்ற அளப்பரும் செல்வப்பேறேயாகும். அவள் குடியேறியபொழுது தோட்டப்புறங்களில் ஏழை எளிய மக்களுடன் திகழ்ந்தாள். வணிகப் பெருமக்களின் வாழ்விலும் வாக்கிலும் காணப்பட்டாள். இன்றோ வானொலியிலும் நாள்தோறும் எதிரொலிக்கிறாள். நாளேடு, வார ஏடுகளில் இலக்கியத்தேரேறி வலம் வருகிறாள். கலைகளில் உல்லாசப்பவனி வந்து ஊக்கமும் ஆக்கமும் தருகிறாள். சமய வழியில் வேரூன்றி அவள் ஆல் போல் தழைக்கிறாள் ” என்று டாக்டர் தமிழண்ணல் கூறுவதிலிருந்து அறியலாம்.

மலேசியாவில் கோவில்களில் மார்கழித் திங்களில் திருப்பாவை, திருவெம்பாவை ஓதப்படுகின்றன. சிறுவர்களுக்கு இவை மட்டுமன்றி இந்து சமயம், நடனம் போன்றவையும் கற்பிக்கப்படுகின்றன. பெற்றோர்கள் தேவாரம், திருவாசகம் மற்றும் ஆழ்வார் பாடல்களை இசையோடு கற்பிக்கின்றனர். தமிழ்நெறிக் கழகத்தினர் போன்ற அமைப்பினர் திருக்குறள் போட்டிகள் வைத்துப் பரிசளித்துத் தமிழை வளர்க்கின்றனர்.

கோவில்களை வைத்தே சமய இலக்கியங்களையும் தமிழ்ப் பண்பாட்டையும் கற்பிக்கின்றனர். மேலும் தமிழ் வளர்க்கப் பல்வேறு அமைப்புகள் உள்ளன. மலேசியாவில் ஐந்நூறுக்கு மேற்பட்ட தமிழ்ப் பள்ளிகள் உள்ளன. இவை தமிழ்ப் பணியைச் சிறப்பாகச் செய்து வருகின்றன. தமிழ் ஆசிரியர்கள் தமிழைக் கற்பிப்பதுடன் தமிழ்க் கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் வளர்க்கும் பணியிலும் ஈடுபடுகின்றனர். தமிழ் ஆசிரியர்களுக்குச் சமூகத்தில் நல்ல மதிப்பும் மரியாதையும் இருக்கிறது. சிங்கப்பூரில் உள்ளதுபோல் அவரவர் தாய்மொழியைப் படிக்க வேண்டும் என்று கட்டாயம் மலேசியாவில் இல்லை மலாய் மொழியைக் கட்டாயம் படிக்கவேண்டும். ஆனால் சீன மொழி, தமிழ்மொழி மற்றும் மற்ற மொழிகளை மாணவர்கள் விரும்பினால் படிக்கலாம். சீனர்கள் படிக்கிறார்கள். ஆனால் நாட்டில் 521 தமிழ்ப் பள்ளிகள் இருந்தும் படிக்கும் மாணவர்கள் எண்ணிக்கை குறைவாகவே இருக்கிறது. பெரும்பாலான வீடுகளில் மலாய் மொழியையே பேசுகின்றனர். இன்று பெரிய பதவிகளில் உள்ளவர்கள் இலங்கைத் தமிழர்கள். அவர்கள் ஆங்கிலேயர்களின் காலத்தில் அரசாங்கப் பெரிய பொறுப்புகளில் பணிபுரிவதற்கு மலேசியாவிற்கு வரவழைக்கப்பட்டவர்கள்.

“1960 ஆம் ஆண்டு பாவலர் சி.குறிஞ்சிக்குமரனார்  ’பாவாணர்’ தமிழ் மன்றத்தைத் தோற்றுவித்தார். இம்மன்றம் இன்றுவரை தமிழ்ப் பணியைச் செவ்வனே செய்து வருகிறது. திரு.அ.பு.திருமாலனார் ’மலேசியத் தமிழர் நெறிக்கழகம்’ என்ற கழகத்தைத் தோற்றுவித்தார். அவ்வமைப்பும் தமிழ்ப் பண்பாட்டு நெறிகளை வளர்த்து வருகிறது. திரு.இர.ந.வீரப்பன் தோற்றுவித்த ’உலகப் பண்பாட்டியக்கம்’ திருக்குறளை வளர்க்கிறது.

இவ்வமைப்புகள் அனைத்தும் தமிழ்ப் பண்பாட்டையும் மொழியையம் வளர்த்து வருகின்றன”. தமிழ் மொழியையும் தமிழ்க் கலாச்சாரத்தையும் வளர்ப்பதற்கு அனைத்து இயக்கங்களும் போட்டி போட்டுக் கொண்டு பணி செய்கின்றன என்பது வெள்ளிடைமலை. மேலும் தமிழ் இலக்கியப் படைப்புகள் அதிகமாக உள்ளதை, ‘தமிழ் நாட்டுக்கு வெளியே இலங்கையைத் தவிர்த்து மலேசியாவில்தான் தமிழ் இலக்கிய உற்பத்தி அடர்த்தியாக இருக்கிறது’. என்பதிலிருந்து அறியலாம்.

அமெரிக்கா

ஆங்கிலம் சூழ்ந்த அமெரிக்காவில் வளரும் தம் பிள்ளைகளுக்குத் தமிழில் பேசவும், படிக்கவும் எழுதவும் சொல்லித் தரத் தொடங்கினர் முப்பது நாற்பது ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவுக்கு வந்த தாய்மார்கள். கூடவே நண்பர்களின் பிள்ளைகளுக்கும் சேர்த்து சொல்லித் தருவோமே! என்ற பரந்த எண்ணத்தில் தொடங்கப்பட்ட சிறு சிறு வகுப்புகள் தான் இன்று அமெரிக்கா முழுக்கப் பரவியிருக்கும் இருநூற்றுக்கும் மேற்பட்ட பெருந்தமிழ்ப் பள்ளிகள். அமெரிக்காவில் மட்டும் இன்று பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பிள்ளைகள் தமிழ்ப் படிக்கிறார்கள். தமிழ்ப்பள்ளிகள் அனைத்தும் முழுக்க முழுக்கத் தன்னார்வலர்களால் நடக்கின்றன. அவற்றுக்கு விதை போட்டு இன்று விருட்சமாக்கிக் கொண்டிருப்பவர்களில் பெரும்பாலானவர் பெண்கள். 1999ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ’உலகத் தமிழ்க் கல்விக் கழகமும்’ (தலைவர் திருமிகு. வெற்றிச்செல்வி), 2010 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ’அமெரிக்கத் தமிழ்க் கல்விக் கழகமும்’ அமெரிக்காவில் உள்ள பள்ளிகளுக்கான பாடத்திட்டத்தை அமைத்துக் கொடுத்து வழி நடத்துகின்றன. இந்தக் கல்விக் கழகங்கள் தொடங்கப்படும் முன்னரே, சிங்கப்பூரில் இருந்து புத்தகங்களை வரவழைத்து, தமிழறிஞர்களின் துணையோடு தாமே பாடத்திட்டத்தை அமைத்து, 1990களில் கணினி பயன்பாடு அதிகமில்லாத கால கட்டங்களிலேயே கணினி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திப் பாடங்களையும் வீட்டுப் பாடங்களையும் பிள்ளைகளுக்குக் கற்பித்து, ஓராண்டு பாடத்தை, ஒன்றரை ஆண்டுகளுக்குச் சொல்லித் தந்து இன்று வரை தரமான தமிழ்க் கல்வியைத் தந்து கொண்டிருக்கும் லக்ஷ்மி தமிழ்ப் பள்ளி தான் அமெரிக்காவின் அட்லாண்டா மாநகரின் முதல்த் தமிழ்ப்பள்ளி. முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன் திருமிகு லக்ஷ்மி சங்கரால் துவங்கப்பட்டு, உலகெங்கிலும் மாணவர்களைக் கொண்டு  இயங்கி வரும் லஷ்மி தமிழ்ப் பள்ளி அட்லாண்டாவின் முன்னோடித் தமிழ்ப் பள்ளியாகத் திகழ்கிறது. தமிழ்க் கல்வியோடு தமிழ்ப் போட்டிகள் நடத்துவதும் தமிழ்ப் பள்ளிகளில் ஒவ்வோர் ஆண்டும் நடக்கும் நிகழ்வு. அதில் மிக முக்கியமாகத் திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியும் நடைபெறும். திருக்குறள் போட்டியை வெறும் மனப்பாடப் போட்டியாக இல்லாமல், பொருளோடு குறளைக் கூறினால் ஒரு குறளுக்கு ஒரு டாலர் பரிசு என்று அறிவித்துப் பிள்ளைகளை ஊக்குவித்து இது வரை 70,000 டாலர்களைப் பரிசாக வழங்கி இருக்கிறது. டல்லாஸ் நகரில் (டெக்சாஸ் மாநிலம்) திருமிகு. விசாலாட்சி வேலு அவர்களின் தலைமையில்  இயங்கும் ப்ளேனோ தமிழ்ப்பள்ளி. இந்தத் திட்டம் பெருவெற்றி பெற்று இப்போது தேசிய அளவில் நடைபெறுகிறது. பெரியவர்களும் ஆர்வத்துடன் பங்கேற்கின்றனர். இதுவரை நான்கு பெரியவர்களும் 1330 குறள்களையும் பொருளோடு கூறி குறளரசர் பட்டத்தைப் பெற்றுள்ளனர். இதில் மூவர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இது போல எத்தனையோ முயற்சிகளை எடுத்துத் தமிழை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்லும் பெரிய பணியை முறையாக, செம்மையாகச் செய்து வருபவர்கள் தமிழ்ப் பெண்கள்.

நார்வே

1990 ஆம் ஆண்டுகளில் பல தமிழ்க் குழந்தைகள் பிறந்து வளரும் காலத்தில் குழந்தைகள் காப்பகத்தில்‚ ஆரம்ப கல்விநிலையங்களில்‚ இளையோர் பாடசாலைகளில் தமிழ் மற்றும் நோர்வேயிய மொழி தெரிந்த ஒருவரை நியமித்து‚ குழந்தைகளுக்குத் தமிழைக் கற்பித்தனர். ஒரு பிள்ளைக்குத் தாய்மொழியில் புலமை இருந்தால் வேற்றுமொழியினை இலகுவாக விளங்கிக்கொள்ள முடியும் என்பதால் நோர்வேயியப் பாடசாலைகளில் தமிழ் ஆசிரியர்கள் உள்வாங்கப்பட்டனர். இங்கு சாதி‚ மதம்‚ ஏழை‚ பணக்காரர் என்ற பாகுபாடு காட்டாது எல்லோரையும் சமமாகவே கருதி ஊக்கம்கொடுத்து கற்பிக்கப்படும். ஆண்டு 11 இலிருந்து ஆண்டு 13 வரை அதாவது‚ 3 ஆண்டுகளில் 23 பாடங்களைக் கற்று‚ அதன் பெறுபேறுகளைக் கொண்டே பிள்ளைகள் எந்தத் துறையில் மேற்படிப்பைத் தொடர்வது என்பது தீர்மானிக்கப்படும்.

இதில், தமிழையும் ஒரு பாடமாக எடுக்கலாம். பெரும்பான்மையான தமிழ்ப்பிள்ளைகள் தமிழை ஒரு பாடமாக எடுத்து நல்ல புள்ளியினைப் பெற்றுள்ளனர். பெற்றோர் பாடசாலையின் ஆலோசனையுடன் மாணவர் பட்டப்படிப்பினை தங்கள் திறமைக்கு ஏற்பத் தெரிவு செய்வதற்குரிய சுதந்திரம் எல்லா மாணவர்களிற்கும் உண்டு. யாரும் யாரையும் கட்டாயப்படுத்த முடியாது என்பதே நோர்வேயின் அறிவுறுத்தல் ஆகும். ஆனால்‚ மருத்துவம்‚ பொறியியல்‚ சட்டவியல் போன்ற துறைகளுக்குக் கடும் போட்டி நிலவும்.

தமிழைக் கற்க நோர்வேயில் உள்ள தமிழ்ப் பாடசாலைகளின் பங்களிப்பு ஓர் இனக் குழுமத்தின் உயிர்ப்பின் அடையாளமாக இருப்பது மொழி. அது பண்பாட்டின் வழிவந்த ஊற்று எனலாம். மொழியின்றேல் இனமில்லை; அந்த இனத்தின் தனித்துவ அடையாளங்கள் இல்லை. பல்பண்பாட்டுச் சூழலில் புலம்பெயர்ந்து, தமது பிள்ளைகளுக்குத் தமிழ்மொழியைக் கற்பித்து, தமிழினூடாகத் தமிழர் என்ற அடையாளத்தை நிலைநிறுத்தப் பல்வேறு செயற்பாடுகளைப் புலம்பெயர்ந்த ஈழத்தமிழர் ஆற்றிவருகின்றனர்.

நோர்வேயில் இரண்டாம் தலைமுறை மாணவர்கள் 60 களில் இருந்தே இலங்கைத் தமிழரின் புலப்பெயர்வு ஆரம்பித்து விட்டதாயினும் அது பண்பாட்டு ரீதியில் பெருமாற்றத்தை ஏற்படுத்தியதென்று கூறமுடியாது. 80 ஆம் ஆண்டுகளில் இருந்தான புலப்பெயர்வே இங்கு  கருத்தில் கொள்ளப்படுகிறது.

அவ்வாறு புலம்பெயர்ந்தவர்களைத் தலைமுறை என்று வகுத்துப் பார்த்தால் தற்போது இரண்டாந் தலைமுறை தாண்டி மூன்றாந் தலைமுறையும் உருவாகிவிட்டது எனலாம். குறிப்பாக, 1983 யூலைக்    கலவரங்களின் பின்னரே நோர்வேயில் புலம்பெயர்ந்து வாழ்ந்து வருகின்றனர் ஈழத்தமிழர். இவ்வாறு புலம்பெயர்ந்தவர்களை இன்று முதலாந் தலைமுறையினர் என அழைக்கலாம். அதிகம் இளையோரே அப்போது புலம்பெயர்ந்தனர். அதற்குப் பல்வேறு சமூக அரசியற் காரணங்கள் இருந்தன.

அவர்களுள் வாழ்விட அனுமதி கிடைத்தவர்கள் படிப்படியாகத் தமது சகோதரர்களை,தாய் தந்தையரை இலங்கையிலிருந்து வரவழைத்தனர். தமிழ்க்கல்வி பற்றிய சிந்தனை புலம்பெயர்ந்து வந்தோர் மத்தியில் நோர்வேயில் தமிழ்க்கல்வி தொடர்பான சிந்தனை 90 களின் பின்னரே ஏற்பட்டது. இவர்கள் வாழ்விட உரிமை, நோர்வே நாட்டு மொழியைக் கற்றுக்கொள்ளல், தொழில் வாய்ப்பு என்பன ஓரளவு வாய்த்தபின்னரே தமது குடும்பம் மற்றும் எதிர்காலம் பற்றிச் சிந்திக்கத் தொடங்கினர். இவர்கள் குடும்பமாகத் தம்மை நோர்வேயில் நிலைநிறுத்திக் கொள்ளும்போதுதான் தமது பிள்ளைகளின் தமிழ்க்கல்வி, தமிழ்ப்பண்பாடு பற்றிச்  சிந்தித்தனர்.

01.02.1992 ஆம் ஆண்டு 22 மாணவர்களுடன்; தமிழ் ஆர்வலர்களின் விருப்பப்படி நோர்வேத் தலைநகர் ஒசுலோவில் ‘அன்னை பூபதி தமிழ்க்கலைக் கூடம்’ உயிர்பெற்றது. தமிழ்ப் பாடசாலையானது தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் உதவியுடன் திரு சிவதாஸ் சிவபாலசிங்கம் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது.

2000 ஆம் ஆண்டு ஒசுலோவில் ‘தமிழர் வள ஆலோசனை மையத்தினால்’ சொந்தக் கட்டடம் ஒன்று வாங்கப்பட்டது. இதில், அன்னை பூபதி தமிழ்க்கலைக் கூடத்தின் தாய்வளாகமாக ‘றொம்மன் வளாகம்’ இதில் நிலைபெற்றதுநோர்வேயில் வயது ஐந்தில் இலிருந்து ஆண்டு பத்து வரை தனக்கான பாடப்புத்தகங்களைத் ‘தமிழ் அமுது’ என்ற பெயரில் தன்னகத்தே கொண்டிருந்தது. றொம்மன் வளாகம் கிழமையில் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்களும் உயிர்ப்புப் பெறும். 2012 ஆம் ஆண்டில் 1000 இளவல்களையும் 75க்கு மேற்பட்ட ஆசிரியர்களையும் 12 நிருவாகஉறுப்பினரையும் கொண்டிருந்தது.

நோர்வேயிய முறைக்கு அமைய, ‘அன்னை பூபதி தமிழ்க்கலைக் கூடத்தில்’ வயது அடிப்படையிலேயே தமிழ் வகுப்புகள் அமைகின்றன. இங்கு 3 வயதிலிருந்து ஆண்டு 10 வரை தமிழ் வகுப்புகள் ஆரம்பத்தில் நடைபெற்றன. பின்னர் ஆண்டு 11, ஆண்டு 12 உம் இப்போது நடைபெறுகின்றன.

‘அன்னை பூபதி தமிழ்க்கலைக் கூடத்தில்’ பெரும்பாலும் பிள்ளைகளுடன் வரும் பெற்றோரே ஆசிரியர்களாக உள்ளனர். பலர் தாங்கள் கற்றுக் கற்பிப்போராகவே உள்ளனர். மாணவர்கள் கிழமையில் 2 மணிநேரம் தமிழைக் கற்கின்றனர். இங்குள்ள ஆசிரியர்களுக்கு ஆரம்பத்தில் ‘தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவை’ யிலிருந்து பயிற்றுநர் வருகைதந்து பாடப்புத்தகத்தில் ஏற்படும் ஐயங்களைக் களைந்து சென்றனர். பின்பு நோர்வேயில் உள்ள ஆசிரியர்களே கருத்தரங்கினை நடத்தினர்.

தமிழ்ச்சிறார்கள் தாய்மொழியை மறந்து, தம் அடையாளத்தைத் தொலைத்துவிடக் கூடாது என்னும் உயர்நோக்கில், கட்டணம் ஏதும் இன்றி, இப்பணியில் ஈகையுடன் பணியாற்றுகின்றனர். ஆசிரியர்களுக்குப் போக்குவரத்துச் செலவை ஈடுசெய்யும் அளவிலே சிறு தொகை வழங்கப்படுகிறது. நிருவாகத்தினர் எந்த உதவித்தொகையும் பெறாமல் பணிபுரிகின்றனர். 

இப்பாடசாலைகளின் தொண்டானது நோர்வேயில் தமிழரின் சரித்திரத்தில் மிக உயர்ந்த இடத்தைக் கொண்டுள்ளது. எனலாம். இங்கு மொழிமட்டுமன்றி நடனம், இசை, வயலின், வீணை, சுரத்தட்டு போன்ற எமது கலாசாரத்திற்குரிய கற்கைகளும் இடம்பெறுகின்றன. நோர்வேயில் உள்ள தமிழ் இளையோரில் கணிசமானோர் மொழியைச் சிறப்பாகப் பேசவும் எழுதவும் முடியுமானவர்களாக இருப்பதற்கு இப்பாடசாலைகளும் கரணியமாக உள்ளன எனலாம்.

கலைக் கூடத்தின் பொது நிகழ்வுகளாக பொங்கல்விழா, ஆண்டுவிழா, கலைவிழா, நவராத்திரிவிழா, நத்தார்விழா போன்ற விழாக்களும் பேச்சுப்போட்டி, ஓவியப்போட்டி உறுப்பெழுத்துப்போட்டி, விளையாட்டுப்போட்டி போன்ற போட்டிகளும் ஆண்டுதோறும், நடைபெறுவது வழமை.

பொதுவான பாடப் புத்தகங்கள் உலகம் முழுவதும் ஈழத்தமிழர் பரந்து வாழ்ந்து வருவதால், ‘தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவை’ யானது பெரும்பாலான நாடுகளை இணைத்துப் பொதுவான பாடப் புத்தகங்களை எழுதியதுடன் பொதுவான எழுத்துப் பரீட்சையினையும் வாய்மொழித் தேர்வினையும் அறிமுகப்படுத்தியது. ‘தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையின் நூலாக்கத் தந்தையும்  தேசத்தின் விடுதலையை ஆழமாக இறுதிவரை நேசித்தவரும் தூயதமிழினைப் பாடப்புத்தகங்கள் மூலம் வெளிக்கொண்டுவந்த நாட்டுப்பற்றாளர் திரு சின்னத்துரை கமலநாதன் ஆவார். 2020/2021 வரை நடைமுறையில் இருந்த இவரது புத்தகங்கள் இன்றும் சில நாடுகளில் பாடத்தில்  உள்ளன.

மீண்டும் ‘அனைத்துலகத் தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவை’ என்ற பெயரினால் திரு பொன்னையா விவேகானந்தன் அவர்களின் ஒருங்கிணைப்பில் ஈழத்து துறைசார் வல்லுநர்களுடன் இணைந்து மீண்டும் உருவாக்கப்பட்ட பாடநூல்கள் 05.06.2021 அன்று வெளியிடப்பட்டதுடன் கல்வியாண்டான 2020/2021 இல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

புலம்பெயர்ந்த தேசங்களில் தமிழ் பயிலும் மூன்றாவது தலைமுறையினரின் தமிழ்மொழி ஆற்றலை இலகுவாக வளர்த்தெடுக்கும் நோக்கத்தில் புதிய தமிழ்ப் பாடநூல்கள் வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

பல்லின கலாசாரச் சூழலைக் கொண்ட தேசங்களில்; தமிழரது தாய்மொழி, பண்பாட்டு விழுமியங்களைப் பாதுகாக்கவும் வளர்க்கவும் என உருவாக்கப்பட்ட அயல்புலத்துத் தமிழ்க் கல்விக்கூடங்கள் காத்திரமான பணியை ஆற்றி வருகின்றன. இத்தகைய தமிழ்ப்பள்ளிகளில் ஆயிரமாயிரம் மாணவர்கள் கற்று வெளியேறியிருக்கின்றனர்; கற்றுக்கொண்டும் இருக்கின்றனர். நோர்வே நாட்டின் மேல்நிலை வகுப்பில், இயற்பியல், வேதியியல், உயிரியியல், கணிதம் உள்ளிட்ட பாடப்பிரிவுகளோடு, சர்வதேச மொழிகளில் குறிப்பிட்டவற்றில் ஒன்றை மாணவர் தேர்ந்தெடுத்துத் தேர்வெழுத வேண்டும். நோர்வே நாட்டினில் தமிழ்மொழிப் பாடத்தில் பெறும் மதிப்பெண்ணானது நோர்வே நாட்டின் மேற்படிப்பு நுழைவிற்கு உதவுகிறது எனலாம்.

கனடாவில் தமிழர் பண்பாடு.

கனடா ஒரு பல்கலாச்சார நாடு. புதிய குடிவரவாளர்கள், தொழிலடிப்படையில் வெளிநாடுகளில் இருந்து வருவிக்கப் பட்டவர்கள் பல்வகைப் பண்பாடு கொண்ட மக்கள் இந்நாட்டில் வாழ்கின்றனர். இவர்களுக்குள் அரச விசுவாசத்தை ஏற்படுத்தும் நோக்கத்தோடு, முன்னாள் பிரதமர் பியர் ட்டுடோழ்्(Pierre Truedeau) பல்கலாச்சாரக் கொள்கையை(Multiculturalism) 21/07/1988 அன்று சட்ட பூர்வமாக்கிக் கொண்டு வந்து கனட வாழ் அனைத்து சிறுபான்மை மக்கள் இனத்து மக்களின் பல்கலாச்சார பண்பாடுகளுக்கு அரச யாப்பில் அமைய வழி செய்தார்.

இதனடிப்படையில், கனேடியப் பெருநீரோட்டத்து இணைந்து தமது பண்பாட்டு நடவடிக்கைகளை பேணத்தக்க உரிமையும், சலுகையும் தமிழர்க்குக் கிட்டியது. இந்த வாய்ப்பின் படியே தமிழ்மொழி கற்றல், நடனம், இசை கற்றல், தமிழர் பண்பாட்டு விழாக்கள் நடத்தல், கோயில்கள் அமைத்தல், திருவிழாக்கள் நடத்துதல் போன்ற கலை பண்பாட்டு நிகழுகள் நடத்தப் படுகின்றன். இன்னும் தமிழில் பத்திரிகை, இதழ், வானொலி, தொலைக்காட்சி, இணையத்தளம் போன்ற ஊடகங்கள் தொடங்கப்பட்டு, கருத்துப் பரிமாற்றங்கள், கலைவளர்ச்சிகள் தொடர்கின்றன. இவ்வாறு அயல்நாடுகளில் வாழும் தமிழர்கள் தங்களின் நாடுகளில் தமிழ் மொழிக் கல்வி, பண்பாடு போன்றவற்றைத் தக்கவைக்கும் பணியில் மிகச்சிறந்து விளங்கின்றனர்.

Author Details

முனைவர் து. ஜானகி

உதவிப்பேராசிரியர்

Bibliography

  • பி, டி சீனிவாச ஐயங்கார் தமிழர் வரலாறு, 1929
  • இராமச்சந்திர தீட்சிதர் , தென்னாட்டு வரலாறு,1951
  • தேவநேயப் பாவாணர், தமிழர் வரலாறு, 1972
  • க. த. திருநாவுக்கரசு, தென்கிழக்கு ஆசிய நாடுகளில் தமிழ்ப் பண்பாடு, 1987
  • நோர்வேயில் வேர்விட்ட விருதுகள் - சின்னத்துரை உமாபாலன் (நோர்வேவாழ் தமிழர்களின் வரலாற்றுத் தொகுப்பு 1956-2016)
  • அ. தட்சணாமூர்த்தி, 1973, தமிழர் நாகரிகமும் பண்பாடும், வெற்றிச்செல்வி பதிப்பகம், இந்தியா
  • முனைவர் சோமலெ சோமசுந்தரம்,2021, அமெரிக்காவின் ஐம்பது முகங்கள்
  • உலகத் தமிழ்